இதுவரை தமிழகத்தில் ஆப்ரேசன் கஞ்சா திட்டத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்த 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கமிஷனர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய போலீஸ் காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி கொடுத்துள்ளோம். அதேபோல் பாதிப்பை ஏற்படுத்தாமல் லத்தி, துப்பாக்கி பயன்படுத்தாமல் குற்றவாளிகளைக் கைது செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளோம். காவலர்களைத் தாக்கக் கூடிய ஒரு சில குற்றவாளிகளை அவர்களுக்கு எந்தவித காயமும் இல்லாமல், உயிரிழப்பும் இல்லாமல் எப்படி அவர்களை கைது செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் புல்லட் பயன்படுத்தி துப்பாக்கி வைத்திருக்கக்கூடிய குற்றவாளியை கைது செய்ய முடியும். அதற்கான பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம். பெண் காவலர்களுக்கும் சேர்த்து இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனுடைய நோக்கம் எந்தவித காயமும் இல்லாமல், உயிர் சேதமும் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்வதுதான். ஏனென்றால் சில வேளைகளில் காவல்நிலையத்தில் மரணம் நடப்பதற்கு முக்கியமான காரணமே குடிபோதையில் சில குற்றவாளிகள் காவலர்களை தாக்கும்போது அவர்களை லத்தியால் அடிக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.
எனவே அதுபோல் அடிக்காமல் இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தி அவர்களை கைது செய்வதற்கான பயிற்சி கொடுத்திருக்கிறோம். இதனால் காலப்போக்கில் எந்தவிதமான கைது மரணங்களும் கூடாது, நடக்காது என்பதற்காக இதைச் செய்கிறோம். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 1, 2 ஆகியவற்றில் சேர்த்து 20,000 குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். சுமார் 200 பேரை ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். மீண்டும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இருந்தால் அவர்களை மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வோம்'' என்றார்.