அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 'தமிழ் அர்ச்சனை துவக்கவிழா' நேற்று முன்தினம் நடந்த நிலையில் தற்பொழுது அடுத்து வரும் 10 நாட்களுக்கு கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற, பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆவணித் திருவிழாவில் அதிக அளவு மக்கள் கூட வாய்ப்புள்ளதால் கரோனா தொற்று எண்ணிக்கை கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ச்சியாக வரும் செப்.5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.