திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புகழ்பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் பௌர்ணமி மட்டுமல்லாமல் அமாவாசைக்கு முன்பு வரும் பிரதோஷம், பௌர்ணமிக்கு முன்புவரும் பிரதோஷம் நாட்களில் நந்திக்கு செய்யும் அலங்காரம், பூஜை பிரசித்தி பெற்றது. இதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கோயில்கள் திறக்கவில்லை. ஆகமவிதிப்படியான கோயில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் பூஜைகள் மட்டும் நடந்துவந்தன. பிரபல கோயில்களின் பூஜைகள், திருவிழாக்களை, ஆன்லைனில் ஒளிப்பரப்பினர். செப்டம்பர் முதல்வாரம் முதல் கோயில்கள் அனைத்தும் தமிழகத்தில் திறக்கப்பட்டன. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற விதியை கடைப்பிடித்து கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் உட்பட சில முக்கிய கோயில்களில் பிரதோஷம் நாட்களில் நந்திக்கு அலங்காரம் செய்வது, பூஜை செய்வதை காணவரும் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் நிற்க வைத்து அலங்காரம் செய்வது, பூஜை செய்வதை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவண்ணாமலை உட்பட பல கோயில்களில் அப்படி செய்வதில்லை. பிரதோஷத்தன்று பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் பக்தர்கள் தரப்பில் இருந்து வைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செப்டம்பர் 29ஆம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு அலங்காரம், அபிஷேகம், பூஜை போன்றவை நடைபெற்றது. இதனை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதன் அருகே சென்று தரிசனம் செய்யவும் அனுதிக்கவில்லை.
இதுகுறித்து அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் நம்மிடம், “கருவறையில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருவறைகள் என்பது சிறியது, அதன் அருகே பக்தர்கள் அமர்ந்து அபிஷேகத்தை பார்க்கும் அறையும் சிறியது, அதனால் அங்கு அமர்வு தரிசனத்துக்கு அனுமதித்தால் நோய் பரவும். அதனால், அதனை ரத்து செய்ததை வரவேற்கிறோம். பிரதோஷம் என்பது நந்திக்கானது. நந்தி கோயில் பிரகாரத்தில் வெளியே இருக்கும். இதற்கான அலங்காரம் மற்றும் பூஜை செய்வதை பக்தர்கள் சாதாரணமாக தரிசனம் செய்ய வைக்கலாம். பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்து அதனை பார்க்கப்போகிறார்கள். இதனால் நோய் பரவுதல் என்பது குறைவு. ஆனால், திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அரசின் விதிகளை காரணம் காட்டி பக்தர்கள் அதனை நின்று பார்க்க அனுமதிக்க மறுக்கிறது. தஞ்சை பெரிய கோயிலில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கவைத்து தனித்தனியே நந்தி முன் உட்கார வைத்து பிரதோஷ வழிப்பாட்டை காணவைத்தார்கள். அவர்களுக்கு அந்த விதி பொருந்தாதா” என கேள்வி எழுப்பினார்கள். அடுத்து வரும் பிரதோஷத்திலாவது பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து அலங்காரம், பூஜை போன்றவற்றை காண ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள்.