Skip to main content

வெறிச்சோடிய இருக்கைகளை படமெடுத்த நிருபர்; அவசரமாக முடிந்த பாஜக பொதுக்கூட்டம்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

A deserted BJP rally-a meeting that ended in haste

 

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியல் சாசன சமர்ப்பண நாள் மற்றும் பஸ்தி சம்பார்க் அபியான் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பட்டியல் அணித் தலைவர் தடா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றுப் பேசினார். மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அகத்தியர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி, மாநில செயலாளர் வினோத் செல்வம், கட்சியின் மாவட்ட தலைவர் மருதையன், மற்றும் சிவ பித்தன் ஈஸ்வர் ராஜலிங்கம், நந்தனார் கல்விக் கழக நிர்வாகி ஜெயச்சந்திரன் மற்றும் ஆன்மீக குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 

இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணாமலை வருகிறார் எனக் கூட்டத்தின் கடைசி நாள் வரை அறிவித்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்திற்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் பட்டியல் அணி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதாகவும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறியிருந்தனர். ஆனால் 800 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட்டத்தின் பாதி நேரத்தில் அண்ணாமலை வரவில்லை எனத் தெரிந்ததும் கலையத் தொடங்கினர். வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதில் பாதி இருக்கைக்கு மேல் காலியாக இருந்தது. மேலும் சிறப்புப் பேச்சாளர்கள் பேசும்போது வெறும் 100 பேர் மட்டுமே இருந்தனர். இரவு 8 மணிக்கு 75 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தது. இதனை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது அங்கிருந்த கட்சியினர் செல்போனை பிடுங்கி படங்களை அழித்தனர். பின்னர் அவர்கள்  நாகரிகமற்ற முறையில் பேசினர்.  

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கையில் அமராமல் சுற்றித் திரிந்தனர். இது மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கூட்டம் கலைவதைப் பார்த்த தலைவர்கள் இரவு 8.30 மணிக்கு எல்லாம் கூட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்