Skip to main content

பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர், வி.ஏ.ஓ.

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
Deputy District Collector, V.A.O., who took the bribe. Arrest

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். செல்போன்  கடையை நடத்தி வரும்  இவரது தாய் பெயரில் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள இடம் உள்ளது. இந்த இடத்திற்கான பட்டாவில் உள்ள தனது தாய் பெயரில் இருந்து தனது பெயருக்கு மாற்றுவதற்கு பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர், சரத்குமார் மற்றும் பெருந்துறை மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி ஆகிய இருவரையும் அணுகியுள்ளார்.

அப்போது பட்டா மாறுதல் செய்ய இருவரும் முதலில் ரூ.8 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ள நிலையில் தனசேகரன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியரிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதன் பின்னர் பட்டா மாறுதல் செய்ய ரூ. 15 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் மற்றும் பெருந்துறை மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி ஆகிய இருவரையும் லஞ்ச போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இருவரும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் பெற்ற வழக்கில் கைதானவர்கள் 48 மணி நேரத்திற்கு பிறகு சஸ்பெண்ட் செய்யப்படுவர். அதன்படி பெருந்துறை மண்டல துணை வட்டாட்சியரான நல்லசாமியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதேபோல் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமாரை ஈரோடு ஆர்.டி.ஓ ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்