ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றும் பாஜக அரசைக் கண்டித்து தவாக ஆர்ப்பாட்டம்!
படுகொலையினின்றும் தப்பிக்க அடைக்கலம் தேடி ஓடிவரும் மியான்மர் ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள்! பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதில் அவர்களை வெளியேற்றியே தீருவதென்று நீதிமன்றத்திலும் கூறிய நடுவண் பாஜக அரசு! மோடி அரசின் மனிதத்தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயலைக் கண்டித்து வரும் 27ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவுக்கு அப்பால் கிழக்கில் இருக்கும் நாடு மியான்மர். இதன் பழைய பெயர் பர்மா. இந்நாட்டின் மேற்கில் கடலோர மாநிலமான ராக்கைனில் ஏறத்தாழ 10 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சிறுபான்மையினரான இவர்கள் பக்கத்து வங்கதேசத்தில் வாழும் ரோகிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ரோகிங்கியா முஸ்லிம் என்றே அழைக்கப்படுபவர்கள்.
ரோகிங்கியா முஸ்லிம்கள் என்பதால் இவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியவர்கள் என்ற பேச்சு அந்நாட்டில் நீண்ட காலமாகவே இருந்துவந்தது. இதனால் பெரும்பான்மையினரான பவுத்தர்களுக்கு அவர்கள் மேல் கடுமையான வெறுப்பும் இருந்தது.
இந்த வெறுப்பு 2012ஆம் ஆண்டில் கலவரமாக வெடித்தது. நூற்றுக்கணக்கான ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் உயிருக்குப் பயந்து அகதிகளாக வெளியேறினர்.
அன்றிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்களை படுகொலை செய்வதும் அடித்து நாட்டைவிட்டே துரத்துவதும் தொடர்கதையானது.
இந்த இனப்படுகொலையை அன்று ராணுவ ஆட்சி செய்ததென்றால் இன்று அந்த ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீட்டுக் கொண்டுவந்தவரான ஆங்சான் சூக்யியின் ஆட்சியே செய்கிறது.
இப்போது 2012ஆம் ஆண்டில் ஏற்பட்டதைவிட பெரிய அளவில் வன்முறை வெடித்து, வங்கதேசத்தில் மட்டும் 3.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்திய எல்லைப்புறத்திலும் 40 ஆயிரம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர்.
ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறையை உலகமே கண்டிக்கிறது.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், இந்த வன்முறை வெறியாட்டத்தை மியான்மர் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். அதோடு உலக நாடுகள் ரோகிங்கியா அகதிகளுக்கு உதவ வேண்டும்; அவர்களை தங்கள் நாட்டில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும் ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டனம் செய்துள்ளார்.
ஆனால் இந்திய நடுவண் மோடி அரசோ, “ரோகிங்கியா முஸ்லிம்கள் தீவிரவாதத் தொடர்புடையவர்கள்; அவர்களால் தேசப் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படும்; அதனால் அவர்களை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை; சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்த அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்கிறது.
மோடி அரசின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அடைக்கலம் தேடி ஓடிவரும் ரோகிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றக்கூடாது என பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் துணை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் “ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளால் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாகக் குடியேறிய அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் சட்ட எல்லையை தங்களுக்குச் சாதகமாக மாற்றி உரிமையை வலுக்கட்டாயமாக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.
அதோடு, தேவைப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய விவரங்களையும் சீலிடப்பட்ட உறையில் இட்டுத் தரத் தயார் என்றும் கூறினார். அகதிகள் குறித்த 1951 மற்றும் 1967ஆம் ஆண்டுகளின் ஐ.நா. ஒப்பந்தங்களில் கையெழுத்திடாததால் அவை இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும் வாதிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பொதுநல மனுவின் மீதான விசாரணையை அக்டோபர் 3ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இங்கு தமிழ்நாட்டிலும் சென்னையை அடுத்த கேளம்பாக்கம் முகாமில் 19 ரோகிங்கியா முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. புயல் பாதிப்பு புகலிடமான ஒரு பழைய கட்டடத்தைச் சுற்றிய திறந்தவெளியில் மரம், பிளாஸ்டிக் மற்றும் துணியால் ஆன கொட்டகைகளில் இவர்கள் தங்கியுள்ளனர்.
மொத்தம் அவர்கள் 94 பேர். அவர்களில் சிறுவர், சிறுமியர் 52 பேர். இவர்கள் 2012ல் நடந்த கலவரத்தின்போது வந்து சேர்ந்தவர்கள். மோடி அரசின் கெடுபிடியால் இவர்களும் திகிலுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஐ.நா.வின் சென்னை அலுவலக அதிகாரிகள் குழு தமிழக அரசின் ஒப்புதலுடன் இவர்களை நேரில் வந்து சந்தித்தது. ஆனால் முகாமின் வசதி குறித்து ஆய்ந்து பதிவு செய்து சென்றது. என்றாலும் ரோகிங்கியா அகதிகளான இவர்களுக்கு தாங்கள் வெளியேற்றப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் போகவில்லை.
படுகொலையினின்றும் தப்பிக்க அடைக்கலம் தேடித்தான் கால் போகும் இடங்களுக்கு ஓடுகின்றனர் மியான்மர் நாட்டு ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள்!
அந்த அபலைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதில் அவர்களை வெளியேற்றியே தீருவதென்று நீதிமன்றத்திலும் போய்க் கூறுகிறதே நடுவண் பாஜக அரசு!
மோடி அரசின் இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டித்து, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், 27 – 09 – 2017 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறது வாழ்வுரிமைக் கட்சி.