கடலூர் மாவட்டம், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடராஜர் கோயிலில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொறுப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் பேசுகையில், "நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. இந்த நிலையில் மன்னர்கள் கட்டிய கோயிலுக்கு அவர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒருதலைபட்சமாக தீர்ப்பை பெற்றுக்கொண்டு கோயில் தங்களது என கூறி வருகிறார்கள். இதனை அப்போதைய அரசு மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. தற்போது உள்ள தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அனைத்து சாதியினரும், அர்ச்சகராகலாம், வழிபடலாம் அரசியல் சட்டம் வழிகாட்டுகிறது. ஆனால் தீட்சிதர்கள் வழிபாட்டு உரிமையை பறித்து உள்ளனர். பெண் பக்தரை சாதிப் பெயரைக் கூறி திட்டி வெளியே அனுப்பி உள்ளனர்.
அதேபோல், தமிழ் தேசிய முன்னணியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் விழாக்காலங்களில் சாமிக்கு தீபாராதனை காட்டும் போது அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னரும், தீட்சிதர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. எனவே தமிழக முதலமைச்சர், இதில் தலையிட்டு தீட்சிதர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் சிற்றரசர்கள் ஏராளமான வைரம், வைடூரியம், தங்கம், நிலம் அசையா சொத்து, அசையும் சொத்து என பல்வேறு விதங்களில் வழங்கியுள்ளனர். அதில் என்ன உள்ளது என்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி கமிஷன் அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். இதில் கொள்ளை அடித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள நிலையில், இந்த கோயிலுக்கு மட்டும் விதிவிலக்கா? எனவே அரசு தனி சட்டம் இயற்றி அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். கோயிலில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் தீட்சிதர்களை கைது செய்ய தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், கோயிலை தனிச்சட்டம் இயற்றி இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.