'ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம்' என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்ததைத் திரும்பப் பெறக்கோரி, இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் பிப்ரவரி 14- ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது நாளாக மருத்துவர் சங்கத்தின் கிளைத் தலைவர் பிரசாத் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூர் வரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை ஐ.எம்.ஏ.வின் தேசிய துணைத் தலைவர் ராஜா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய ஐ.எம்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் சரவணன், "அலோபதி மருத்துவம் ஆதாரப்பூர்வமானது. இந்த மருத்துவ முறைக்குப் பயிற்சி பெற, ஆறு முதல் பத்தாண்டு மருத்துவக் கல்லுாரியில் படித்து, கைதேர்ந்து வந்த மருத்துவர்கள் தான் மக்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குகின்றனர். பிற மருத்துவ முறை தவறு என்று கூறவில்லை. யார், யார் எந்தெந்த மருத்துவத்தைப் படித்துள்ளோமோ, அந்தந்த மருத்துவத்தில் சிகிச்சை வழங்குவது தான் சிறந்தது. ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள், அலோபதி முறையில் நடந்துவந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வது அறிவியல் மற்றும் அறிவுப்பூர்வமானது அல்ல. அது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்களிடம் எடுத்துரைக்கவே, இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துகிறோம். மத்திய அரசின் தவறான முடிவைக் கண்டித்து, அதைத் திரும்பப் பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது" என்றார்.
இதில், துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் சுதாகர், செயலாளர் செந்தில்வேல், சுகுமார், அபுல்ஹசன் உட்பட பல மூத்த மருத்துவர்களும் பங்கேற்றனர்.