தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருந்ததால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் பணியாற்றுவோரை முன்களப்பணியாளர்களாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை வரவேற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், மேலும் சில வேண்டுகோளை அரசிடம் முன்வைத்துவருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் சில கட்சித் தலைவர்கள், அதனை நடைமுறைப்படுத்த வேண்டி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, “கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 3,000 இல் இருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அது பாராட்டத்தக்க ஒன்றாகும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்துவரும் துயரங்களைக் குறைக்கும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்புகள் இருந்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இத்தருணத்தில், ஊடகவியலர்கள் இது தொடர்பான இதர கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவசப் பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பு, மிகப்பெரும்பாலான பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்குப் பயனளிக்காமல் போய்விடும் என ஊடகவியலர்கள் கூறுகின்றனர்.
எனவே உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர்கள், சிறப்புச் செய்தியாளர்கள் உட்பட நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில் இதை விரிவுப்படுத்துவது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்” என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.