Skip to main content

மழையில் நனைந்த நெல்மணிகள்; கலக்கத்தில் விவசாயிகள்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Delta farmers affected by rain

 

 

டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் முழுவதும் மழையில் நனைந்து சேதமாகியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

 

திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டுவருகிறது. அந்த நெல்மணிகளை அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கொட்டி மூடிவைத்துள்ளனர்.

 

விவசாயிகள் கொண்டுவந்த நெல்லுக்கு சாக்கு இல்லை, லாரி வரவில்லை என அதிகாரிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டிவருவதால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக  நெல்லை பல இடங்களில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால், எடைபோடாமல் விவசாயிகள் கொண்டுவந்து ஆங்காங்கே தரையில் திறந்தவெளியில் கொட்டி  வைத்திருந்த நெல்மணிகள் முழுவதுமாக நனைந்து நாசமாகியிருக்கிறது. நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்த தார்பாய்கள் கொண்டு மூடியும் பலனின்றி நெல் முழுவதும் நனைந்துள்ளது. நெல்லை சுற்றி தேங்கி இருந்த மழைத்தண்ணீரை விவசாயிகளே இறைத்து வெளியேற்றும் அவலம் தொடர்ந்து வருகிறது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை சரியான நேரத்தில் முறையாக எடுக்காமல் காலம் தாழ்த்தியதால்தான் நெல் முழுவதும் நனைந்து சேதமானது. இதற்கு அரசே முழு பொறுப்பு. திருவாரூர் மாவட்டம் உணவுத்துறையின் அமைச்சரின் சொந்த ஊர், இங்கேயே இந்த நிலமை என்றால் அடுத்தடுத்த மாவட்ட விவசாயிகளின் நிலமை எப்படி இருக்கும்.  இனி வரும் காலங்களில் அ.தி.மு.க அரசு நீடித்தால் விவசாயமே பொய்த்துவிடும், விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலமையாகிவிடும்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்