டெல்டா மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வேதாரண்யத்திற்கு வந்த மின்துறை அமைச்சர் தங்கமணியை, நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இன்று சந்தித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளில், இரவு பகலாக மின்துறை தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும், அவர்களின் தியாகம் போற்றத்தக்கது என்றும், மின் இணைப்புக்காக மின்வாரியம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக தங்களை மனதார பாராட்டுவதாக தெரிவித்தார்.
மேலும், நாகை மாவட்டம் திருமருகல் தொடங்கி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வரை கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 75 சதவீத மரங்கள் அழிந்துப் போயிருக்கும் சோகமான சூழலில், இப்பகுதிகளில் வாழும் மக்களை ஆறுதல் படுத்தும் வகையில் இத்தவணைக்கான, மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தங்கமணியிடம் வலியுறுத்தினார். இக்கோரிக்கையை, முதல்வரிடம் எடுத்துக் கூறி பரிசீலிப்பதாக தங்கமணி கூறினார்.