கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றுக்கு நடுவில் அமைந்துள்ளன மருங்கூர், காவனூர், கீரனூர், தேவங்குடி, வல்லியம் உள்ளிட்ட சுமார் 13 கிராமங்கள். இக்கிராமங்களில் 15,000 –த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விளை நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.
நெல், கரும்பு என மூப்போகமும் விளையக்கூடிய இக்கிராமங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடாக மின்சாரம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் உள்ள 110 கிலோ வாட் தன்மை கொண்ட பூதாமூர் துணை மின் நிலையத்திலிருந்து 33 கிலோ வாட் தன்மை கொண்ட மின்சாரத்தினை மேலப்பாலையூர் மற்றும் கீழப்பாலையூர் கிராமங்களில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து கிராமங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. மழை மற்றும் புயல் காலங்களில் ஏற்படும் மின் சேதங்களால், பூதாமூரில் இருந்து 20 கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள இக்கிராமங்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருளில் வாழும் நிலை தொடர் கதையாகி விடுகிறது. மேலும் சம்பா மற்றும் குறுவை சாகுபடி தொடங்கும் காலத்தில், இக்கிராமங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு தேவையான மும்முனை மின்சாரம் மணிக்கணக்கில் மட்டும் விநியோகிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இம்மின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு இக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றுக்கூடி, பூதாமூரில் அமைந்துள்ள 110 கிலோவாட் தன்மை கொண்ட துணை மின் நிலையம் போல், மேலப்பாளையூர் கிராமத்தில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மின்சார வாரியம் அதற்கான ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துணை மின் நிலையம் அமைப்பதற்காக மேலப்பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள புளிய மரதோப்பு தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட தோப்பில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகள் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ 4.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்த குத்தகைதாரர் புளியமரத்தில் தேவையான கிளைகள் மற்றும் மரங்களை மட்டும் வெட்டிக்கொண்டு, புளிய மர வேரினை அகற்றாமல் சென்று விட்டார். இதனால் துணை மின் நிலையம் அமைப்பதற்கு மின்சார வாரியத்தின் கட்டுமான பிரிவுக்கு ஒப்புதல் வழங்கியும், புளிய மரத்தின் வேர்கள் அகற்றப்படாமல் இருப்பதினால் பணியினை தொடர காலந்தாழ்த்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின்சாரதுறையினர் மேலப்பாலையூரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு தயாராக உள்ள நிலையில், திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால், கிராம வளர்ச்சிக்காக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்கள் வீணாக போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் புளிய மரத்தை குத்தகை எடுத்தவருக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் இடையே பண பரிவர்த்தனை மூலம் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்றும், அதனால்தான் வருவாய்துறை அதிகாரிகள் அலட்சியபோக்காக செயல்படுகின்றானரா என்று பொதுமக்கள் சந்தேகம் அடைகின்றனர்.
குடிநீர், கால்நடைகள், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு மூலதனமாக இருக்கும் மின்சாரத்தினை தங்கு தடையின்றி தரக்கடிய துணை மின்நிலையத்தை மேலப்பாலையூரில் அமைத்திட கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் விவசாயிகளை திரட்டி திருமுட்டம் வருவாய்துறை அலுவலகத்தின் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.