திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2500 பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 ந்தேதி மதியம் முதல் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் பேருந்துகளில் வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை வசூலித்து பக்தர்களிடம் கொள்ளையடிக்கின்றன.
திருவண்ணாமலை டூ சென்னைக்கு 155 ரூபாய் தான் பேருந்து கட்டணம். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இந்த கட்டணம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 170 வசூலிக்கப்படுகின்றன. இது தொடர்பாக வழக்கமாக சென்னை சென்று வரும் பயணிகள் கேட்டபோது, இது ஸ்பெஷல் பேருந்து, டீலக்ஸ் பேருந்து என விதவிதமாக கதை சொல்லியுள்ளார்கள். லேசாதான் மழை பெய்யுது, இதுக்கு ஒழுகுது, இது டீலக்ஸ் பேருந்தா என பயணிகள் கேள்விக்கேட்க, நாங்கயென்ன பண்றது, அதிகாரிங்க அப்படித்தான் சொல்லச்சொல்றாங்க?, நாங்களும் சொல்றோம், அவுங்க சொல்ற மாதிரி கட்டணம் வாங்கறோம் என காரணம் கூறியுள்ளார்கள்.
அதேப்போல் திருவண்ணாமலை டூ தாம்பரம் வரை ஒரு ரேட்டும், திருவண்ணாமலை டூ கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் வரை ஒரு ரேட்டும் பேருந்து கட்டணமாக வசூலிப்பார்கள். ஆனால், தீபத்தை முன்னிட்டு எங்கே இறங்கினாலும் ஒரே ரேட் தான் எனச்சொல்லி கட்டணம் வசூலித்துள்ளார்கள். கோயம்பேடு, தாம்பரம், செங்கல்பட்டு என எங்கே ஏறினாலும் திருவண்ணாமலைக்கு 170 ரூபாய் என்றே கட்டணம் வசூலித்தார்கள் என்கிறார்கள் சென்னையில் இருந்து தீபத்தை காண வந்த பக்தர்கள்.
இதேப்போல்தான் தென்மாவட்டங்கள், கொங்குமாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்களிடம் பேருந்து கட்டணத்தை அதிகாரபூர்வமற்ற முறையில் உயர்த்தி கொள்ளையடித்துள்ளார்கள்.