Skip to main content

தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்

Published on 18/11/2017 | Edited on 18/11/2017
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்

ஜெ. மறைந்ததும் அவர் இல்லாத இடத்தில் தனக்கு வேலையில்லை என்று போயஸ் இல்லத்தை அதன் வாரிதாரரிடம் ஒப்படைத்துவிட்டு தன் சொந்தங்களோடு சசிகலா சென்றிருந்தால் இப்போது நடைபெற்றிருக்கும் ஐ. டி ரெய்டு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஜெ.வின் சட்டப்பூர்வ வாரிசான எனது மனைவி தீபா, பிறந்து வளர்ந்த போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லத்திற்குள் அவரை அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது என்று எம்ஜிஆர் ஜெஜே திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் க.மாதவன் கூறியுள்ளார். 

மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள்  2011ம் ஆண்டு  சசிகலாவையும் அவர் உறவினர்களையும், அவர்கள் செய்த சதி வேலைகள் தெரியவர போயஸ் இல்லத்திலிருந்து  வெளியேற்றினார். அவர்கள் அனைவரையும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கினார். சில மாதங்கள் கழித்து மாண்புமிகு அம்மாவுக்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தில் என் உறவினர்கள் செய்த சதிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, இனிமேல் நான் அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன், உங்களுக்கு கடைசி வரை பணிவிடை செய்ய மட்டுமே வருகிறேன் என்று கூறினார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு, அம்மா அவருக்குரிய பெருந்தன்மையோடு  சசிகலாவை தம் இல்லத்திற்குள் அனுமதித்தார். 

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி நம் யாவரையும் விட்டு மறைந்து விட்டார் என்பதை  ஊடகங்கள் மூலமாக நாம் அறிவோம். மறைந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இல்லாத போயஸ் இல்லத்திலே சசிகலா  யாருக்கு பணியாற்றினார்? அம்மா இல்லாத இடத்தில் அவருக்கு என்ன வேலை? அம்மாவுக்கு செய்த சத்தியத்தை மீறி, அம்மா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டவுடன், அம்மாவுக்கு  துரோகம் செய்த சொந்தங்களை அழைத்துக் கொண்டார். மட்டுமின்றி அப்பல்லோ முழுவதும் சூழ்ந்திருந்தது அம்மாவால் வெளியேற்றப்பட்ட சொந்தங்கள் தான். அதுமட்டுமன்றி அம்மாவின் மறைவுக்குப்பின் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற முழு வேகத்துடன் தந்திரமாக செயல்பட்டார். புரட்சித்தலைவியின் ஆசி பெறாத சசிகலா தன் எண்ணம் ஈடேறாமல் சிறைக்கு சென்றார். 

அம்மா மறைந்ததும் அம்மா இல்லாத இடத்தில் தனக்கு வேலையில்லை என்று போயஸ் இல்லத்தை அதன் வாரிதாரரிடம் ஒப்படைத்துவிட்டு தன் சொந்தங்களோடு சசிகலா சென்றிருந்தால் இப்போது நடைபெற்றிருக்கும் ஐ. டி ரெய்டு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அம்மா வாழ்ந்த இடம் கோயிலைப் போன்றது. அந்த இடத்தில் இவ்வாறான ரெய்டு நடப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இந்த  ரெய்டு அங்கு நடக்க முழுக்காரணம் சசிகலா குடும்பம் தான்.  புரட்சித்தலைவி அம்மா உயிரோடு இருந்தபொழுது ,அவருக்கு களங்கத்தையும் சங்கடங்களையும் ஏற்படுத்திய சசிகலா, அம்மா மறைந்த பின்பும் அவருக்கும், அவரின் புகழுக்கும்  இழுக்கை ஏற்படுத்தியுள்ளார். அம்மாவின் ஆன்மா யாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது. 

புரட்சித்தலைவி அம்மாவின் ரத்த சம்பந்தமுள்ள ,சட்டப்பூர்வ வாரிசான எனது மனைவி தீபா, பிறந்து வளர்ந்த போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லத்திற்குள் அவரை அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது. 

சார்ந்த செய்திகள்