தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சிலிருந்து அழிக்க முடியாத நினைவுகளோடு இருக்கும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவலைகள்.
94 குழந்தைகளும் உயிரிழந்து பதினேழு வருடங்கள் முடிந்து, இன்று ஒரே நேரத்தில் அத்தனை குழந்தைகளையும் நினைவுகூரும் வகையில், குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த எரிந்துபோன பள்ளி வளாகம் முன்பு குவிந்துள்ளனர்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டுவந்த அரசு உதவிபெறும் பள்ளியான கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
அந்தப் பள்ளியில் படித்த குழந்தைகள் இன்று உயிருடன் இருந்திருந்தால் கல்லூரிப் படிப்பை முடித்து தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்ற ஒரு நிழல் தரும் மரமாக இருந்திருப்பார்கள்.
பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அந்த நிழல் தரும் மரங்கள் நம்மோடு இருந்திருந்தால் நம்முடைய வாழ்வில் வேறு எதையும் இழந்திருக்க மாட்டோம் என்ற அந்தப் பதைபதைப்பும் துடிப்பும் 17 ஆண்டுகள் கடந்தும் சற்றும் அடங்காமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த உயிர்களின் வலிதான் இன்று பல உயிர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தைச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. எனவே, மறைந்துபோன அத்தனை உயிர்களும் இன்று பல உயிர்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்திவருகிறது.