இதுவரை வாகன விபத்துகளில் சிக்கி வன உயிரினங்கள் தான் இறந்து போனதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம் ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது புள்ளி மான் மோதி அந்த மானும் வாகனத்தில் வந்த மனிதரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், பச்சைபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(34). இவருக்கு மனைவியும் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தமிழ்ச்செல்வன் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் மேலாளராக பணி செய்து வந்துள்ளார். நேற்று காலை சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வேலைக்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.
அப்போது, சின்னசேலம் கள்ளக்குறிச்சி இடையே உள்ள கணியாமூர் பகுதியில் தமிழ் தமிழ்ச்செல்வன் பைக் சென்று கொண்டிருந்தது. சின்னசேலம் புறவழிச்சாலை அருகே திடீரென குறுக்கே புள்ளிமான் ஒன்று சாலையைக் கடக்க துள்ளி ஓடியது. அப்போது, மான் தமிழ்ச்செல்வன் பைக் மீது மோதியதில் தமிழ்ச்செல்வன் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து 10 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் இறந்து போனது. விபத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இறந்து போன புள்ளி மான் வனத்துறையினர் பிரதேச பரிசோதனை செய்து வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் புதைத்தனர்.