கடந்த வாரம் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஊழல் கட்சி என்றும், தமிழக அரசைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், சர்க்காரியா கமிஷனில் தி.மு.க விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு, தி.மு.க தரப்பில் ஆ.ராசா காட்டமாகப் பதிலடி தந்திருந்தார். அதில், "தமிழக முதல்வருக்கு, திராணி இருந்தால் என்னோடு நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா? ஊழலை உங்கள் அம்மா (ஜெயலலிதா) செய்தாரா அல்லது நாங்கள் செய்தோமா என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்வோம். களத்தை முதல்வர் சொல்லட்டும், தனி ஆளாக நான் வருகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், ராமநாதபுரத்தில் ஆ.ராசாவின் உருவப் பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். பதிலுக்கு, அதிமுகவினருக்கு எதிராக, திமுகவினர் கோஷம் எழுப்பியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் துறையினர் தலையிட்டு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.