Skip to main content

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு; தயாநிதி மாறன் தரப்பு கடும் எதிர்ப்பு!

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
Dayanithi Maran side strongly opposed for EPS seeks release from the case petition

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படிச் செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை எனச் சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.06.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், “தயாநிதி மாறன் இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்” என வாதிட்டார்.

Dayanithi Maran side strongly opposed for EPS seeks release from the case petition

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த அவதூறு வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்கக்கோரிச் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதற்குத் தயாநிதி மாறன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்கக்கோரும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடக் கூடாது. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். அதே சமயம் அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் நிறைவடைந்தது. இதனையடுத்து வரும் அக்டோபர் 16ஆம் தேதி இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்