திருமணமான மறு நாளில் புதுப்பெண் தற்கொலை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலையை அடுத்துள்ள திவான்சா புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விஜய் (வயது-21) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா (வயது-19) என்பவருக்கும் கடந்த 27–ந் தேதி அன்று மீனாட்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
மணமகள் ஜீவாவின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் அவரது பாட்டி கமலா என்பவரது வீட்டில் வைத்து மணமக்களுக்கு மறுவீடு அழைப்பும் நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மறுநாள் 28ந் தேதி ஜீவா தனது கணவர் விஜய் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அங்குள்ள குளியறைக்கு குளிக்க சென்ற ஜீவா ½ மணி நேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த விஜயின் உறவினர்கள் குளியலறை கதவைத் தட்டினர். உள்ளே இருந்து சத்தம் எதுவும் வரவில்லை. பின்னர் உறவினர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புதுமணப்பெண் ஜீவா சேலையில் தூக்கு போட்டு தொங்கியபடி இருந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு பொள்ளாச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுவந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு மூச்சுக்குழல் நசுன்ஜ்கியிருந்த ஜீவாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் சிகிச்சை பலனின்றி ஜீவா இறந்தார்.
இதுகுறித்து ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜீவா அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ஆகவே அவர் வலிப்புநோய் காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவசுப்பிரமணியம்