ராமநாதபுரத்தில் டி.டி.வி.அணியின் மாவட்ட நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட, இதற்குக் காரணம் அமைச்சர் மணிகண்டனே என தகவல் வெளியானதால் இறுக்கமான சூழ்நிலை உருவாகியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில்.
ராமநாதபுரம் நகராட்சியின் 31வது வார்டின் முன்னாள் கவுன்சிலரும், டி.டி.வி.அணியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான தவமுனியசாமி இன்று காலை சிதம்பரம் பிள்ளை வாய்க்கால் ஊருணி அருகில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாத 4 நபர்களால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். சம்பவம் நடைப்பெற்ற பொழுது அங்கிருந்த ஏனைய மக்கள் அவரைக் காப்பாற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்வேளையில், கடந்த வாரத்தில் திருவாடனையில் நடந்த டி.டி.வி.அணிப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாலே இவர் அமைச்சர் ஆதரவாளர்களால் வெட்டப்பட்டார்." என்ற தகவல் வெளியானதால் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே வெட்டுப்பட்ட தவமுனியசாமியின் வாக்குமூலத்தினைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றது பி1 காவல் நிலையம்.