சேலத்தில், மகள் மாயமானதால் விரக்தி அடைந்த தாயார், கணவருக்கு விஷம் கலந்த உணவை சாப்பிடக் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை மல்லி தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 47). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி சுஜாதா (வயது 39). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவர், அடிக்கடி அலைபேசியில் யாருடனோ பேசி வந்திருக்கிறார். இதனை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் மீண்டும் அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் செப். 21- ஆம் தேதி, அலைபேசியில் பேசிய மகளை மீண்டும் தாய் சுஜாதா கண்டித்துள்ளார்.
அன்று மாலை 03.00 மணியளவில் திடீரென்று மகள் மாயமானார். தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தும் அவள் சென்ற இடம் குறித்த விவரம் தெரியவில்லை. தான் திட்டியதால்தான் மகள் ஓடிச்சென்று விட்டாளோ என்ற குற்ற உணர்விலும், பாசத்திலும் தடுமாறிய சுஜாதா தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். கணவரையும் கொன்றுவிட எண்ணியுள்ளார்.
கடையில் இருந்து எலி மருந்தை வாங்கி வந்த அவர், கணவருக்குத் தெரியாமல் அவருக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து சாப்பிடக் கொடுத்துள்ளார். அதையறியாத கணவரும், உணவை சாப்பிட்டுள்ளார். அதையடுத்து சுஜாதாவும் விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன், மனைவி இருவரும் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா இறந்தார். கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான மகளையும் தேடி வருகின்றனர்.