
நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப்பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக நிறுவனத்தலைவர், விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.