பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமானால் நிலையில் பொறியியல் கலந்தாய்விற்கான தேதிகளை மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் பொறியியல் கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி துவங்க இருக்கிறது. 10 ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டமாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முதல்கட்டம் நடைபெறும். இரண்டாவது கட்டம் செப்டம்பர் 25 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் உள்ள காலம் மாணவர்களின் நலன் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டம் அக்டோபர் 13 ல் தொடங்கி 15 வரை நடைபெறும். நான்காவது கட்டம் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறும். நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த கலந்தாய்வுகளில் பொதுப்பிரிவு 31%. இந்த பொதுப்பிரிவில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 30% ல் உள் ஒதுக்கீடாக 3.5% இஸ்லாமியர்களுக்கு என்று ஒதுக்கப்படும். அதிலும் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 7.5% உள் ஒதுக்கீடு.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். 18% பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் அதிலும் 3% உள் ஒதுக்கீடு அருந்தியர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1% இடஒதுக்கீடு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதிலும் உள் ஒதுக்கீடாக 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கொடுக்கப்படும். துணைநிலை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இரண்டாம் முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கப்படும். செப்டம்பர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை பொறியியல் பிரிவிலும் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.