மலைப்பிரதேசத்தில் போக்குவரத்தை இணைக்கும் மரப்பாலம் பழுதாக முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள தனியார் தேயிலை நிறுவனம் முந்தைய காலத்தினைப் போல் தாங்களே பழுது நீக்கி தருவதாக முன் வந்த நிலையில், வனத்துறையினர் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டதால் ஏறக்குறைய 12 நாட்களாக பாலம் சீர்ச்செய்யப்படாமல் மாணக்கர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மணிமுத்தாறு மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, குதிரைவெட்டி, ஊத்து உள்ளிட்டப் பகுதிகளில் 8.373 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதனால் இங்கு ஏறக்குறைய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பணி புரிந்து வருகின்றனர். இந்த மலைப்பிரதேசத்தில் காக்காச்சி மலை - நாலுமுக்கு சாலையில் ஆற்றைக் கடப்பதற்காக மரப்பாலம் ஒன்றும் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் மற்றும் வாகனங்களால் சேதமுறும் இம்மரப்பாலத்தை மாஞ்சோலையிலுள்ள பர்மா டிரேடிங்க் எனும் தனியார் தேயிலை கம்பெனி அவ்வப்போது சீர் செய்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 31ம் தேதியன்று பாலம் மரப்பாலம் சேதமுற, தேயிலைத் தோட்டப்பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவித்துள்ள உயர்நீதிமன்றத்தின் உத்தரவினைக் காரணம் காட்டி வனத்துறை முட்டுக்கட்டையிட இன்று வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் தேயிலைக் கம்பெனியினர் தங்களின் சொந்த முயற்சியால் பாலத்தின் இருபுறமும் வாகனத்தினை நிறுத்தி போக்குவரத்தைத் தொடர உதவி வருகின்றனர்.
இதே வேளையில், மரப்பாலம் பழுதானதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த ஜான்சன் அப்பாதுரை மனித உரிமை ஆணையத்தினை நாட, " மாஞ்சோலை மலைச்சாலையில் உள்ள மரப்பாலத்தை சரிசெய்ய எடுத்த நடவடிக்கை என்ன? எனக் கேள்வியேழுப்பி இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர் 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது ஆணையம். ஐ.என்.டி.யு.சி. தோட்டத் தொழிலாளர் சங்க இணைப் பொதுச்செயலாளரான ராமலிங்கமோ, " இது நாள் வரை அந்த தனியார் கம்பெனி தான் மரப்பாலத்தை சரி செய்து கொடுத்து வந்தாங்க..!! இப்ப அவங்க செய்யவிடாமல் தடுத்ததோடு மட்டுமில்லாமல் தாங்களும் சரி செய்து கொடுக்காமல் உள்ளனர். எப்பொழுது சரி செய்வீர்கள்.? எனக்கேட்டால் இப்பொழுது, அப்பொழுது என தட்டிக் கழிக்கின்றனர். பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்களும், மாணக்கர்களுமே.!" என்கிறார் அவர்.