கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ளது வள்ளி மதுரம் கிராமம். இங்குள்ள பெரிய மாரியம்மன் கோயில் அருகே ஒரு நீரோடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 20 ஆயிரம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.
அந்தத் தடுப்பணை மூலம் மழைநீரை தேக்கி வைத்து, அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், அப்பகுதி விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் பயன்படும் என்ற வகையிலும் அந்தத் தடுப்பணை அமைக்கப்பட்டது.
ஆனால், தரமான கட்டமைப்பில் தடுப்பணை கட்டப்படாதால், சில நாட்களாக இப்பகுதியில் பெய்த லேசான மழையைக் கூட தாங்க முடியாமல், அந்தத் தடுப்பணை முற்றிலும் சேதமடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
ஓடையின் குறுக்கே, தடுப்பணை மூலம் தேக்கி வைத்த தண்ணீரும், பெருமளவு வெளியேறிவிட்டது. இந்தத் தடுப்பணை திட்டப்பணி நடைபெற்றிருப்பது குறித்த மதிப்பீட்டு விளக்கக் குறிப்பு கல்வெட்டும் இந்த மழையில் அடித்துச் சென்றுவிட்டது. ஆறு மாத காலத்தில் அரசு கட்டிய தடுப்பணை சேதமடைந்துள்ளது.
இதற்குக் காரணமான அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுநல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.