கரோனா பல குடும்பங்களையும் கலைஞர்களையும் வீதிக்கு கொண்டுவந்துள்ளது. அப்படி வாழ்வின்றி நிர்கதியாக நின்ற பூம் பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆதியன் சமுதாய பழங்குடி மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கி அவர்களின் குடும்பங்களையும் மிளிர செய்திருக்கிறார் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் தங்க.கதிரவன்.
நாகப்பட்டினம் நகரத்திற்கு மிக அருகில் உள்ள செல்லூர் கிராம சுனாமிக்குடியிருப்பில் ஆதியன் சமூகத்து மக்கள் வசித்து வருகிறார்கள். ஆதி இசைக் கலைஞர்களும், நல்வாக்கு சொல்பவர்களுமான அவர்கள் அந்த தொழில் நலிவுற்று இன்று வாழ்வாதாரம் இல்லாமல் பிளாஸ்டிக் வியாபாரம் செய்தல், யாசகம் பெறுதல், வளையல், பாசிமணி விற்றல், பழைய துணிகளை வாங்கி விற்றல் என பெரும் துன்ப நிலையில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் துயர நிலையை உற்று கவனித்து அவர்களை அந்த துயரநிலையிலிருந்து மீட்கும் எண்ணத்தை மனதில் நிறுத்தி இப்போது அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்விதமாக அவர்களுக்கு கறவை மாடுகளை வாங்கிகொடுத்துள்ளார் தங்க.கதிரவன்.
பூம் பூம் மாட்டுக்காரர்களாக அவர்கள் வாழ்ந்திருந்தாலும் தற்போது அவர்களிடம் ஆசையாகக்கூட கால்நடைகள் இல்லாத நிலையிலேயே இருந்தனர். கறவை மாடுகளை வாங்கிய சந்தோஷத்தோடு அவர்கள் கூறுகையில், "ஒரு காலத்தில் எங்க முன்னோர்கள் பசுமாட்டோடு மேளம் வாசித்து மக்களை மகிழ்விப்பார்கள், வாக்கு சொல்லியும் வந்தார்கள், ஆனால் இன்று எங்களிடம் பெயருக்குக்கூட ஒரு மாடு கிடையாது. அந்த தொழிலையும் மறந்துவிட்டோம், நாங்கள் தினசரி குடும்பத்தை நகர்த்த பட்டபாடு வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இன்று அண்ணன் தங்க.கதிரவனின் பெரும் முயற்சியால் எங்களுக்கு மாடு கிடைத்துள்ளது, வருமாணத்துடன் அந்த கடனை அடைக்கவும் வழி செய்து கொடுத்துள்ளார், அவருக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளோம்" என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள்.
இந்த மக்களுக்கு கறவை மாடுகள் கிடைக்க முயற்சித்த வானவில் தொண்டுநிறுவனத்தின் ரேவதியோ, "அந்த மக்களின் வாழ்வியல் முற்றிலுமாக கவலை நிலையில் இருந்ததை நன்கு உணர்ந்தேன். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்து தங்க.கதிரவனிடம் கூறினேன், அவர் மனமகிழ்வோடு செய்து கொடுத்துள்ளார்" என்கிறார்.
ஆதியன் மக்களுக்கு கறவை மாடுகள் கிடைக்க வழிவகை செய்த சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் தங்க.கதிரவனோ," சிக்கல் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் மூலமாக அந்த மக்களுக்கு கறவை மாடுகளை வாங்கித்தந்துள்ளோம். பதினைந்து குடும்பங்களில் முதல் கட்டமாக ஆறு கறவை பசு மாடுகள் வழங்கியுள்ளோம். விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் கறவை மாடுகள் வாங்கிக்கொடுக்க இருக்கிறோம். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாகவும் பதிவு செய்யப்பட்டு பால் விற்பனை மையமும் அங்கு அமைக்கப்பட உள்ளது.
கஷ்ட ரேகைகள் நிறைந்த அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியும் சிரிப்பும், கண்களில் நம்பிக்கையும் காணமுடிந்தது. அந்த மக்கள் தங்களது புதிய பயணத்தை நிலையான வாழ்வாதாரம் எனும் மாபெரும் இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த முயற்சி பல்கிப்பெருகி பல இடங்களிலும் இருக்கும் பூம் பூம் மாட்டுக்காரர் ஆதியன் சமூகத்துக்கு மாற்று வாழ்வினை உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன். என் பொதுவாழ்வில் இந்த நாளை மிகச்சிறப்பான நாளாக நினைத்து மகிழ்கிறேன்" என்கிறார் அவர்.