தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், "நெய்வேலி தொகுதியில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க அரசு ஆவன செய்யுமா" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், "நெய்வேலி தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பின் சங்கம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய சபா.ராஜேந்திரன், "நெய்வேலி சட்டமன்ற தொகுதியை ஒரு முன் மாதிரி தொகுதியாக எடுத்துக் கொண்டு அங்கு இருக்கின்ற பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகளுக்காக பால் உற்பத்தியாளர்கள் சார்பில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் அரசு அமைக்க உள்ள பால்பண்ணையை நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் அமைத்துக் கொடுத்தால் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்" என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், "கள ஆய்வு மேற்கொண்டு நெய்வேலி தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போல சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, முதலமைச்சருடன் கலந்து பேசி அவருடைய விருப்பத்திற்கிணங்க செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
நெய்வேலி தொகுதியில் பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கூறியிருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.