கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் பால்ராஜ். இருவரும் காட்டூர் ரங்க கோனார் வீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
நேற்றிரவு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு வணிக வளாகத்திலேயே படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, செல்வத்தின் செல்ஃபோன் காணாமல் போயுள்ளது. அப்போது, செல்வத்திற்கும் பால்ராஜிற்கும் இடையே செல்ஃபோன் காணாமல் போனது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் பால்ராஜ், தன்னிடம் இருந்த ஸ்குரூ டிரைவரால் செல்வத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் செல்வம் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இன்று, செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காட்டூர் காவல் துறையினர் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.
குடிபோதையில் கூலித்தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.