கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப்பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போதுவரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்திப் போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 'ஒமிக்ரான்' வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேற்று (15.12.2021) அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் எழுதிய அவசர கடிதத்தில், ''கரோனா தடுப்பூசி செலுத்தத் தவறியவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டுவருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தினமும் வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து டிசம்பர் 25ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 'ஒமிக்ரான்' பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஜனவரிமுதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.