இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாடு சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. கட்சியின் பொதுக்கூட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டு பேசுகையில்,
இந்த நாட்டில் தற்போது சாமியார்களுக்குத்தான் சொத்துகள் அதிகமாக உள்ளது. யார் கொடுத்தார்கள். எப்படி வந்தது? என்ற கணக்கு இல்லை. கணக்கும் கேட்க முடியாத நிலை. இந்திய பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று கூறினார். ஆனால் செய்தாரா?.
பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் கூறினார். ஆனால் செய்யவில்லை. விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. அவர் பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏழைகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். விஜய் மல்லையா ஒரு குற்றவாளி. அதனால் அவர் வகித்து வரும் எம்.பி. பதவியை பா.ஜ.க. அரசு பறிக்க வேண்டும்.
பா.ஜனதா தேசியச் செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். பெரியார் சிலை மட்டுமல்ல தேசிய தலைவர்கள் சிலைகள் மீது கை வைத்தால் அவர்களை தமிழ்நாட்டில் நடமாட விடமாட்டோம். இதில் ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய எதிர்ப்புகளை காட்ட வேண்டும் உண்மையான தேசபக்தி உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.