வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு வானுயர உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், விலை உயர்வை குறைக்கக்கோரியும் தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சொத்துவரி உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் கதிர்காமன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், ராஜா, தொகுதி துணைச் செயலாளர் பீட்டர், தொகுதி தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் முருகன், அசோக் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்ட போராட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது.
போராட்டத்தின்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் கதிர்காமன், பேய் வேடம் அணிந்து அடுப்பில் காலை நீட்டி எரியும் அடுப்பின் மீது வாணல் வைத்து வடை, அப்பளம் செய்வது போன்று சமையல் செய்துகாட்டி போராட்டத்தினை வித்தியாசமான முறையில் நடத்திக் காட்டினார்கள். இவர்களின் வினோத போராட்ட நிகழ்வினை கண்ட பொதுமக்கள் அதை வியப்புடன் பார்த்தனர். போராட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் பெருமளவில் கூடினார்கள். இதனால் பாலக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மாநில அரசுகள் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும் இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் செலவுகள் அதிகரித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே போர்க்கால அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பேசினார்கள். இந்த வித்தியாசமான போராட்டம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.