அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் போலீசார் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ரோட்டில் அமர்ந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பல்வேறு கொலை மிரட்டல்கள்; அச்சுறுத்தல்கள்; ஆபாசமாக பேசுதல்; தொலைப்பேசி மூலமாக மிரட்டுதல்; கொலை மிரட்டல் விட்டு பேசியது சம்பந்தமாக நான் பல்வேறு புகார்களை காவல்நிலையத்தில் கொடுத்திருக்கிறேன். திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலும், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் பல்வேறு புகார்களை கொடுத்துள்ளேன்.
அதேபோல் வாட்ஸப்பில் என்னை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி செய்திகளைப் பதிவிட்டு 'வீச்சரிவாளுடன் கொலை செய்வேன்' என்று ஒருவர் பதிவிடுகிறார். அதையும் நான் புகாராக கொடுத்தேன். கொடுத்து இரண்டாண்டு காலம் ஆகிறது. ஒரேநாளில் எனக்கு கிட்டத்தட்ட 400 தொலைப்பேசி அழைப்புகள் மூலமாக ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் வந்தது. அதுகுறித்து நான் கொடுத்த புகாரில் இன்று வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. 'வீடேறி உள்ளே வந்து உன்னை கண்டம் துண்டமாக வெட்டி வீசுவேன்' என்று பதிவிட்ட வரை அட்ரஸோடு புகார் கொடுத்தும் அவரைக் கூப்பிட்டு காவல்துறையை மன்னித்து அனுப்புகிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது'' என தெரிவித்தார்.