பள்ளி விழா ஒன்றில் அண்ணாமலை படத்துடன் கூடிய கட்அவுட்டை தூக்கிக்கொண்டு வந்த பாஜகவினரை கெட்அவுட் சொல்லி விரட்டியடித்த ஹெட்மாஸ்டரின் செயல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கும் இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஆனால், இதை அரசு நிகழ்ச்சி என்பதை மறந்த பாஜக நிர்வாகிகள், தங்களது கட்சி பொதுக்கூட்டம் என்பது போல் பாஜக கொடிகளையும் ஃபிளக்ஸ் பேனர்களையும் பள்ளி வளாகத்தின் முன்பாக வைத்துள்ளனர். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் கட்சிக் கொடிகளையோ பேனர்களையோ பயன்படுத்தக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகும். ஆனால், இந்த வழக்கத்தைப் பின்பற்றாத பாஜக நிர்வாகிகள், பள்ளி வளாகத்தின் முன்பாக பாஜக பேனர்களை வைத்துள்ளனர்.
அந்த ஃபிளக்ஸ் பேனரில் பாஜக கட்சியின் சின்னமான தாமரை, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைவரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் வெள்ளியங்கிரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்த பேனர்களை மாணவர்களே அகற்றினர்.
ஆனால், இதற்கு ஒத்துவராத பாஜக நிர்வாகிகள், “இத ஸ்கூலுக்குள்ள வெச்சாதான தப்பு.. நாங்க வெளிய வெச்சுக்குறோம் கொடுங்க” என அந்த பேனரை வாங்கிக்கொண்டு, பள்ளிக்கு வெளியே வைத்துள்ளனர். அதன்பிறகு வந்த வானதி சீனிவாசனை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடிய பாஜக தொண்டர்கள் அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசு, சரியாக வானதி சீனிவாசன் நடந்து செல்லும்போது அவரது காலுக்கு கீழே வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.