ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன்(42). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபா (38). இவர்கள் இருவரும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு பேருந்தில் அரக்கோணம் தாலுகா பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரூபா கால் வலியால் மெதுவாக நடந்து செல்ல மனைவிக்கு முன்பாக 10 அடி தொலைவில் கணவன் தனஞ்செழியன் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு வந்த திருடன் திடீரென ரூபா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் செயினை பறிக்க முயன்றான்.அப்போது செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என ரூபா கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து திருடன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் தனஞ்செழியன் திருடனின் சட்டையை பிடித்து இழுக்க முயன்றார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனஞ்செழியனை வெட்ட முயன்ற போது அவர் கத்தியை கெட்டியாக பிடித்துள்ளார். கத்தியை திருடன் இழுத்ததில் தனஞ்செழியனின் கை விரல்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.