Skip to main content

“ஊரடங்கை பயன்படுத்தி, ஊழியர்களை சுரண்டக் கூடாது” - ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Curfew should not be used to exploit employees - Judge's advice to automobile companies!

 

ஊரடங்கிலிருந்து வழங்கப்பட்டுள்ள விலக்கைச் சாதகமாக்கி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஊழியர்களைச் சுரண்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்தபோது ஆட்டோமொபைல், டயர் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலை ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (25.05.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, மனுதாரர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷிஃப்ட் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறியபோதும், பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனவும், தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தொழில் பாதுகாப்புத் துறை கண்காணிப்பும் இல்லை என்றும், ஹூண்டாய் நிறுவன ஊழியர்கள் இன்று காலை பணியில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

 

இதை மறுத்த ரெனால்ட் நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக எடுத்துள்ளதாகவும், கரோனாவால் ஆலை வளாகத்தில் யாரும் இறக்கவில்லை என தெரிவித்தார். மேலும், அரசு உதவினால் ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர். மேலும், தொழில் பாதுகாப்புத் துறையினர் கண்காணிப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும், ஊரடங்கு விலக்கை சாதகமாகப் பயன்படுத்தி, ஊழியர்களைச் சுரண்டக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்