நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், பல்ஸ் ஆக்சிமீட்டர் குடும்பத்திற்கு ஒன்று வழங்க வேண்டும் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன். நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், “நாகையில் 5 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி எளிதாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தால் மட்டுமே கள நிலவரம் தெரியும், உயிர் காக்க வேண்டிய பிரச்சினையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் காட்டக் கூடாது.” என்றார்.
மேலும், நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும். குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் வழங்குவது போல் பல்ஸ் ஆக்சிமீட்டரை குடும்பத்திற்கு ஒன்று வழங்க வேண்டும். 108 சேவையை அதிகரிக்க வட்டார அளவிலான ஒருங்கிணைப்பை தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த வேண்டும், தற்போது கரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுகிறது அதனை மறைத்து தமிழக அரசு குறைவான எண்ணிக்கையை வெளியிடுகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும், கரோனா தொற்றின் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூட அரசு தயங்குகிறது. ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும். நோய்த்தொற்றைக் குறைக்க அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து பேசிமுடித்தார்.