Skip to main content

பெண்ணுக்காகப் போதையில் கொலை செய்த நண்பன் தப்பியோட்டம்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

CUDDLore district youth incident police investigation


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், நேற்று (10/10/2021) நள்ளிரவு அவசர ஊர்தியின் மூலம், 25 வயதுமிக்க அருண்ராஜ் என்பவர் ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டபோது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தது யார் என்றும், எந்த இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,  விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியிலிருந்து 108 அவசர ஊர்திக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி அழைப்பு வந்தது தெரியவந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் வழிநெடுக ரத்தம் சிதறிக் கிடப்பதும்,  ரத்தம் படிந்த சட்டை கிடைப்பதையும் கண்டறிந்தனர். 

 

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டபோது திரு.வி.க. நகரைச் சேர்ந்த நபிஸ் என்பவர் தனது மனைவியுடன் வசித்துவந்த வாடகை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்பு 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி மூலம் அழைத்த விடுத்த நபர் யார் என்றும் நபிஸின் நட்பு வட்டாரங்கள் யாரெல்லாம் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கத்திக்குத்தில் இறந்த இளைஞர், நபிஸின் நண்பர் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. 

 

மேலும் இது தொடர்பான விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த கலை, வி.என்.ஆர் நகரைச் சேர்ந்த மனோஜ், திரு.வி.க நகரைச் சேர்ந்த நபிஸ், வடலூரைச் சேர்ந்த அப்பு என்கிற பிரேம் ஆகிய 5 இளைஞர்களும்  நண்பர்களாக இருந்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்றிரவு (10/10/2021) அருண்ராஜை தொலைபேசி மூலமாக விருத்தாச்சலத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர் அனைவரும்  ஒன்றாக நபிஸின் வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, பெண் தொடர்பான  பிரச்சினையில் அப்பு என்கிற பிரேம், தனது நன்பனான அருண்ராஜை கத்தியால் குத்தியுள்ளார்.  இதனைப் பார்த்த சக நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த  அருண்ராஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறி 108 அவசர ஊர்தியை வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது. 

 

அதையடுத்து அப்பு (எ) பிரேம், மனோஜ், கலை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். முக்கிய குற்றவாளி நபிஸ் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

மது போதையில் சக நண்பனை கொலை செய்து, 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்