மூன்று ஆண்டுகள் கடந்தும் முடிக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி, பாதி வேலையில் நிற்கும் பாலங்களால் விபத்து எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து பரங்கிப்பேட்டையை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான பணி கடந்த 20.07.2015 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மாநில நெடுஞ்சாலையான இச்சாலையானது சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவினலானது. இச்சாலை பணிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கியின் மூலம் பெற்ற கடன் உதவி என 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களுரை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு 17.01.2018 க்குள் முடித்துவிட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் அதே சாலையில் வளையமாதேவியில் முகாமிட்டு சாலை பணிகளை செய்து வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு துறைமுகங்களில் ஒன்று பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது. இதனால் விருத்தாசலம் வழியாக சேலம், திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு, கடல்வழி மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு பெரிதும் வழிவகுக்கும் என்று அமைக்கபட்ட இந்த சாலை பணிகள் இழு இழு என இழுத்துக்கொண்டிருப்பதால் இச்சாலை பணிகள் முடித்து எப்போது முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த சாலை வழியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சேலம், கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம் போன்ற நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முழுவதும் முடிவடையாத பாலங்கள், பாதி, பாதியாக போடப்பட்டிருக்கும் சாலையால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிப் படுவது மட்டுமில்லாமல், 15 கிலோமீட்டர் சென்று வருவதற்கே உடம்பு வலி, வாகனங்கள் ஏற்படுத்தும் மண் புழுதியால் மூச்சு திணறல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிராமங்களில் இருந்து சைக்கிள் மூலமாக பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுக்கு சாலையில் உள்ள மேடு, பள்ளங்களால் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடனே உள்ளனர்.
பாலம் கட்டும் பணியானது பாதியிலேயே நிற்பதினால், பாலத்தின் வெளியே தெரியும் இரும்பு கம்பிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாததால், எந்த சூழ்நிலையிலும் தவறி விழுபவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் பாதி வேலை முடிந்துள்ள பாலங்கள், பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள், தடுப்பு வேலிகள், இரவில் மிளிரும் ஒளிப்பான்கள் போன்றவைகள் எதுவும் சரிவர அமைக்கப்பாடததால், புதிதாக பயணிக்கும் நபர்கள் அச்சத்துடன் பயணிப்பதும், ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளதாக கூறுகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையானது சில இடங்களில் தரமற்ற முறையில் அமைப்பதாகவும், இரண்டாக பிளவு படுவதாகவும் கூறி ஆங்காங்கே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திய பிறகு கண் துடைப்புக்காக 'பேட்ச் ஒர்க்' மட்டும் நடந்து வருகின்றன. முன்னதாக இச்சாலை பணியை தொடங்கும் போது சாலையோரமிருந்த வீடுகள், நிலங்கள், மரங்கள் போன்றவற்றை கையகப்படுத்த முற்பட்ட போது நிவாரண தொகை குளறுபடிகளால் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற காவல்துறை மூலம், அடக்குமுறை கையாண்ட தமிழக அரசானது, குறிப்பிட்ட நேரத்தில் சாலை பணியை முடிக்காத ஒப்பந்தாரர்களின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சாலை பணிக்காக ரூ.162 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சாலை போடுவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முழு வேலையும் முடிக்கபடாமல் இருப்பதாலும், அதற்குள் சாலையில் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டு வருவதினாலும், இந்த சாலை பணியில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த சாலையை ஒப்பந்தம் செய்த நிறுவனம் சாலை பணியை முழுவதுமாக முடிக்காமல் இழுப்பதால் தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இச்சாலை பணிகளை முழுமையாக முடித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான பயணத்துக்கு வழி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.