Skip to main content

கணவனை இழந்த பெண்ணை கத்தியால் குத்திய ஆண் நண்பர்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

cuddalore srimushnam woman case police arrested her boy friend

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (32 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் சாந்தி, சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்துவந்தார். 

 

இந்த நிலையில், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள பூக்கடையில் வேலை செய்யும் மணிவண்ணன் (30) என்பவருக்கும் சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது. அவ்வப்பொழுது இவர்கள் இருவரும் தனிமையிலும் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் சாந்தியின் குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தியை வேலைக்கு செல்லவிடாமல் வீட்டில் இருக்க வைத்துள்ளனர். 

 

சாந்தியைச் சந்திக்க முடியாத அவரது ஆண் நண்பர் மணிவண்ணன் நேற்று முன்தினம் இரவு, சாந்தியின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார். அப்போது சாந்தி தன்னை தேடி இனிமேல் வரக்கூடாது என்று கடும் கோபத்துடன் கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த மணிவண்ணன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோழதரம் காவல் நிலைய போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தியைச் சந்தித்து அவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ஸ்ரீமுஷ்ணம் பொறுப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கத்தியால் குத்திய மணிவண்ணனை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்