Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடலூரில் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடலூரில்
பள்ளி மாணவர்கள் போராட்டம்!



நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு  நீதி கேட்டும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நீட் தேர்வு எழுத சிபிஎஸ்இ படிப்பு மற்றும் சிறப்பு வகுப்புகள் படிக்க வேண்டும் என்றும் அதற்கு 15000 செலவு செய்து படிக்க வேண்டியதாகவும், அதற்கு வசதியில்லாததால்தான் நாங்கள் அரசு பள்ளியில் படிப்பதாகவும்  வேதனை தெரிவித்தனர்.

மத்திய அரசு தமிழகத்தில் தொடர்ந்து தனியார்மயமாக மாற்ற  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக நீட் தேர்வை தடைசெய்யாவிட்டால் தமிழகம் மீண்டும் ஒரு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நீட் தேர்வை தடைசெய்ய கூறி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போல் கடலூர் செம்மண்டலம்  அரசினர் தொழிற்கல்வி நிலையம்(ITI)ல் நீட் தேர்வை தடை செய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கும் நீதி கேட்டு மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்