கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் என 3000- க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த உளுந்தூர்பேட்டைக்கு செல்வதற்கு, 100- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் இரண்டு மணி நேரமாகியும் அரசு பேருந்து வரவில்லை. அதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கல்லூரி மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளானதால் காவல்துறையினர் கல்லூரி மாணவர்களை தடியடி நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது.