கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசித்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சரியான பொருளாதார வசதி இல்லாததால் அந்த இடம் பட்டா கொடுத்ததில் இருந்து சில ஆண்டுகளாக காலியாக கிடந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் மாற்று சமூகத்தினர் அந்த இடங்களில் மாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர்.
இதுகுறித்து ஆதிதிராவிட மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காவல்துறையினரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது நிலங்களை மீட்டுத் தாருங்கள் என புகார் கொடுத்து வந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பின்னர் கடந்த சில ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவேண்டுமென தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் மாற்று சமூகத்தினர் கட்டியிருந்த வீடுகளை அகற்றும் பணி காவல் துறையின் பாதுகாப்புடன் வியாழனன்று நடைபெற்றது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் முன்னதாக இதில் வீடுகளை இழக்கும் மாற்று சமூகத்தினருக்கு 13 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு புவனகிரி வட்டாட்சியர் தல 3 சென்ட் வீட்டு மனையை வழங்கியுள்ளார்.