சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் மேலுமொருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சூழலில், தற்போது கரோனா காரணமாகப் பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் 2.21 லட்சம் பேருக்கும் மேல் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் கரோனா பரவுதலை தடுக்க இந்திய அரசு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் 10 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.