கடலூர் மாவட்டம் கடலூர் -சேலம் சாலை வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ,வேப்பூர், கடந்து சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக 2015 ல் அறிவித்து, தரம் உயர்த்தி விரிவாக்கப் பணிகள் சுமார் 257 கோடி ரூபாய் செலவில் நடந்து முடிந்தது. தற்போது இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்த சாலையில் கடலூர் - நெய்வேலி இடையில் உள்ள பொன்னகரம், மேப்பூர் - தலைவாசல் கூட்டுரோடு இடையில் உள்ள கீழ்குப்பம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலித்து சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் தீர்மானித்துள்ளது. இதில் கீழ்குப்பம் சுங்கச்சாவடி ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. பொன்னகரம் சுங்கச்சாவடியை விரைவில் திறக்க இருப்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், ”விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலை தரமில்லாமல் உள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்” உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் அவரது அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத வரை சுங்கச்சாவடி திறக்கக்கூடாது எனப் போராட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேபோன்று திருச்சியிலிருந்து அரியலூர் மாவட்டம் வழியாக சிதம்பரம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடையார்பாளையம் அருகே உள்ள மணகதி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் சுதாகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், "இந்த சுங்கச்சாவடியைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்து விளைய வைத்த விளைபொருட்களை அறுவடை செய்து வாகனங்களில் இந்த வழியாகத்தான் எடுத்து வர வேண்டும். மேலும், விவசாயம் செய்வதற்கு டிராக்டர், டாட்டா ஏஸ் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் தினசரி பலமுறை சுங்கச் சாவடியைக் கடந்து அவரவர் கிராமங்களுக்குச் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியைக் கடக்கும் போது அந்த வாகனங்களுக்குக் கட்டணம் கேட்பார்கள். ஒரு நாளைக்குப் பலமுறை சில கிலோ மீட்டர் தூரம் விவசாயப் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் எப்படி சுங்கக் கட்டணம் செலுத்த முடியும். மேலும், 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் 30 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். இதுவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளிக்கப் போவதாகவும், சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் 30 கிராமங்களில் உள்ள மக்களையும் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறினர்.