மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கடலூர் மாவட்ட கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றி பேசுகையில், " இந்திய விடுதலை போராட்டம், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது கம்யூனிஸ்டு கட்சி. அந்த தியாகிகளின் தியாகம் வீண் போகாது. பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் சுதந்திர போரில் ஈடுபடவில்லை. அவர்கள் ஆங்கிலேயரை விட இஸ்லாமியர்களை தான் எதிரிகளாக நினைத்தார்கள்.
1964- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிதாமகன்களான ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட 9 பேர் சுதந்திர போராட்டத்திற்காக 34 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒரு நாள் கூட சிறையில் இருந்தது இல்லை. ஆனால், அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். பாஜக இந்திய தேசிய வாதம் பேசாமல், இந்து தேசிய வாதம் தான் பேசுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக யாராவது கருத்து கூறினால், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆங்கிலேயர் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே தலைவர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக கடைபிடித்து வருகிறது. ஜனநாயகத்தை முற்றிலும் தகர்க்கும் முறையை கடைபிடித்து வருகிறார்கள்.
சுதந்திரத்துக்கு பின்னர் ஒன்றியங்களை ஒன்றிணைக்கும் பேச்சு வார்த்தையின் போது காஷ்மீருக்கு 370 என்ற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு சுயாட்சி அந்தஸ்து வழங்கி தான் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்திய யூனியன் என்ற நிலையை ஒரே சட்டத்தில் பாஜக தகர்த்து விட்டது. இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்கிறது. ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக ஒரு கையால் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் செய்துக்கொண்டே, மறு கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கடன் தள்ளுபடி செய்கிறது. தற்போது ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையில் தனியார் மயத்தை எதிர்த்து மோடியின் தொகுதியான வாரணாசியில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து தொழிலாளர்களும் தற்போது மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒருங்கிணைத்து நடத்தும். தமிழகம் தனது சுய உரிமைக்காக தீவிரமாக போராடி வரும் மாநிலம். இப்போராட்டம் வரும் நாட்களில் தீவிரமடையும். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்று அவர்களை எதிர்க் கட்சியாக மாற்றுவோம்" என்றார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலமாக 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசுப்பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி கட்சியின் சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலமாக தமிழகத்தில் 1 பள்ளியை மூடுவதற்குக் கூட மார்க்சிஸ்ட் அனுமதிக்காது" என்றார்.
மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், " மோடி என்றால் வளர்ச்சி என்று கூறினார்கள். இப்போது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். 15 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நாங்கள் கூறியதை இப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒத்துக்கொண்டார். ஆனாலும், அதனை சரிசெய்வதாகக் கூறி மீண்டும் கார்ப்பரேட், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கே சலுகைகளை வாரி வழங்குகிறார்.
சாதாரண மக்கள், தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து போன்ற நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத ஆட்சியே நடக்கிறது. இவர்களை வீட்டிற்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்" என்றார். அதனை தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு, மூத்த நிர்வாகிகள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் வரவேற்று பேசினார்.