அதிமுக 3 எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் தெற்கு வீதியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்த நாளையொட்டியும், கழக வளர்ச்சி குறித்தும் தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ முருகுமாறன், பண்ருட்டி தொகுதி சத்யா பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மண்டப நுழைவு வாயில் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனை தொடர்ந்து மண்டபம் முகப்பு வாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.