கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது சிறு முளை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பாத்தி(63). இவருடைய கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் 2 டிப் டாப் ஆசாமிகள் பாப்பாத்தி வீட்டுக்கு வந்து, 'உங்களுடைய கணவர் இழப்புக்காக அரசு வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 15 ஆயிரம் உதவித்தொகை வந்துள்ளது. அதற்கான விசாரணைக்காக நாங்கள் வந்திருக்கிறோம். இந்த பணம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் 3000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைத்ததற்கு நாங்கள் உதவி செய்வோம்' என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி சிறுக சிறுக சேர்த்து வைத்த மூவாயிரம் பணத்தை பாப்பாத்தி அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இது சம்பந்தமாக உங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் ஊர் ரேஷன் கடைக்கு எடுத்து வாருங்கள். நாங்கள் அங்கே காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதை முழுவதும் உண்மை என நம்பிய பாப்பாத்தி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ரேஷன் கடைக்கு சென்றார்.
அங்கிருநத ரேஷன் கடைக்காரரிடம் விபரத்தைக் கூறி கேட்டபோது, அப்படி யாருமே இங்கு வரவில்லை உங்களை யாரோ ஏமாற்றி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து திட்டக்குடி போலீசாரிடம் பாப்பாத்தி புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த இரண்டு டிப்டாப் ஆசாமிகளையும் தேடிவருகிறார்கள்.