Skip to main content

போதைக்காக மெத்தனால் அருந்திய ஒருவர் பலி! 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


கடலூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சந்திரகாசு (55) என்பவருக்கு நேற்று (14/04/2020) காலை திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த எழில்வாணன் (35), மாயகிருஷ்ணன் (42) ஆகியோரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆணையம்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (42) என்பவரும் இதேபோல் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடுவீரப்பட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

cuddalore government hospital police investigation


இந்த நிலையில் சந்திரகாசன் திடீரென நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, மற்றவர்கள் அடுத்தடுத்து இதேபோல் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததையடுத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் குமரேசன் (28) என்பவர் கடலூர் அடுத்துள்ள சிப்காட்டில் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படும் தனியார் மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனாலை தனது கிராமத்திற்கு எடுத்து வந்துள்ளார். 

சுந்தரராஜ் அதை போதை வஸ்துவாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் அதனுடன் தண்ணீரைக் கலந்து சந்திரகாசு, எழில்வாணன் ஆகியோருடன் சேர்ந்து குமரேசனும் போதைக்காக அருந்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் நேற்று (14/04/2020) காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரகாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சந்திரகாசன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp


இதனிடையே கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளைப் பயன்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ எச்சரித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்