கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் 29 பெண்கள் உட்பட 40 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 பேரூராட்சிகளிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சி சார்பாக தினசரி ஆண்களுக்கு 225 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கரோனா ஊரடங்கை காரணம் காட்டி மார்ச் மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரை 1000 மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் ஜுன் மாதத்திலிருந்து ஆண்களுக்கு 220 ரூபாய் என கணக்கிட்டு 6600 ரூபாயும், பெண்களுக்கு ரூபாய் 170 என கணக்கிட்டு 5 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரியிடம் சென்று கேட்டால் ஆட்குறைப்பு செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று (11/07/2020) பணியைப் புறக்கணித்து திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பளம் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.