கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பரவலூர், அண்ணாநகர், கலரங்குப்பம், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மேம்பாலத்தின் அருகில் சென்று மணிமுத்தாறில் கலக்கிறது.
இந்த வாய்க்காலைத் தூர்த்து அதில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பரவலூர் மற்றும் ரெட்டிக்குப்பம் இடையே மணிமுத்தாற்றில் 16 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மணிமுக்தா ஆற்றில் கலக்கும் வாய்க்காலைத் தூர்த்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து கவனம் செலுத்தாத நெடுஞ்சாலைத்துறை மீண்டும் அந்த வடிகால் வாய்க்காலை மூடிவிட்டு பணியை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நீர்வழி ஓடையைத் தூர்த்துக் கட்டப்படுவதைக் கண்டித்தும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்தும் மணிமுத்தாறு பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரவேண்டும், அவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் விமல்ராஜ் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், "பாலம் கட்டுமானப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. போதிய அளவு சிமெண்ட் இரும்பு கம்பிகள் அமைக்கப்படாமல் தரம் இன்றி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பாலத்தின் உறுதித்தன்மையை பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளைப் பழிவாங்கும் நோக்கில் விவசாய நிலங்களிலிருந்து தண்ணீர் வரும் வழியை மறித்துப் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களில் வடிகால் வாய்க்கால் மூடாமல் அதில் சிமெண்ட் சுவர்களால் கால்வாய் அமைக்க வேண்டும். இல்லையெனில் வீராணம் ஏரியில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் குழாய்களைப் பொருத்தி வடிகால் வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்ற அதிகாரிகள், ஓடையில் எப்போது போலவும் நீர் போக குழாய் மற்றும் சுற்றுச்சுவரும் அமைத்துத் தரப்படும் எனவும், பாலத்தின் இறங்கு பகுதியிலும் ஏறும்பகுதியிலும் கிராவல் அடித்து அதன் மேல் சாலை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினர் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கலைந்து சென்றனர்.